• vilasalnews@gmail.com

கோபாலபுரத்தில் அண்ணாமலை... 2024-ல் பாஜக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் அழிவு ஆரம்பமாகும்!

  • Share on

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை இன்று நடைபெற்றுவருகிறது. ஆனால், ராமர் கோயில் விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டுக் கோயில்களில் சிறப்புப் பூஜை, அன்னதானம், பொது இடங்களில் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய மாநில அரசு தடை விதித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், பா.ஜ.க-வினரும் குற்றம்சாட்டினர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவோ, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது என பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் வீட்டுக்கு முன்பு இருக்கும் வேணுகோபால் கோயிலில், அயோத்தி கோயில் நேரலை ஒளிபரப்பை காண, கோபாலபுரம் வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

அப்போது அவர், ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வைப் பிரதமர் மோடி முக்கிய எஜமானனாக நின்று நடத்திக் காட்டியிருக்கிறார். 1952-லிருந்து பா.ஜ.க-வின் முக்கிய கொள்கையில் ஒன்று அயோத்தியில் ராமருக்குக் கோயில் எழுப்புவோம் என்ற வாக்குறுதி.


அதை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன், அறவழியில் நின்று, கோயிலைக் கட்டி தற்போது நிறைவேற்றிவிட்டோம். கோபாலபுரத்தில் வேணுகோபால் கோயிலிலிருந்து ராமர் பிரதிஷ்டை நிகழ்வைப் பார்த்தோம். சட்டப்போராட்டம் நடத்தித்தான் தமிழ்நாட்டில் பொதுமக்கள் இந்த நிகழ்வைப் பார்க்க முடிந்தது. 2024-ல் இதற்குத் தமிழ்நாட்டின் மக்கள் பாடம் புகட்டுவார்கள். அறநிலையத்துறை இந்த நிகழ்வைத் தடுத்ததை உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. திமுக அரசு சர்வாதிகாரத்துடன் நடந்திருக்கிறது. 

கோபாலபுரம் கோயில் மிகவும் விஷேசமான கோயில். இந்த கோயிலின் ட்ரஸ்ட்டி அன்போடு அழைத்து எங்களுடன் இந்த நிகழ்வை கண்டுகளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனால்தான் இந்தக் கோயிலுக்கு வந்தோம். தமிழ்நாடு முழுவதும் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கோபாலபுரம் மட்டும் தமிழ்நாட்டின் அரசியலல்ல. இந்த சித்தாந்தம் கடந்து, பல்வேறு சித்தாந்தங்கள் இங்கு இருக்கின்றன. இதில் எந்த அரசியலும் இல்லை. இந்து அறநிலையத்துறையே தமிழ்நாட்டுக்கு வேண்டாம்.

கோயிலுக்கு வரவேண்டும் என்றாலும், இந்து அறநிலையத்துறை அனுமதி வேண்டும் என்ற நிலை உருவாகும். 2024-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க-வின் அழிவு ஆரம்பமாகும். ஜனாதிபதிக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் இன்னொருநாள் வருவதாக பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தி.மு.க தொடர்ந்து பொய்களைச் சொல்லிகொண்டிருக்கிறது என்றார்.

  • Share on

சிறையில் இருக்கும் நிலையில்...திமுக இளைஞரணி மாநாட்டில் செந்தில் பாலாஜி!

ராமர் கோயில் கும்பாபிஷேகம்.... பாஜக போடும் 400 கனவு வாய்ப்பு இருக்கிறதா? ஓர் அலசல்!

  • Share on