பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் இன்று எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் தான் அதிமுகவில் அவர் இணைந்ததன் பின்னணி பற்றியும், எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடு குறித்தும் காயத்ரி ரகுராம் விளக்கி உள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், நடன இயக்குனராகவும் இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொறுப்பில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் தான் அவருக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாதத்துக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார்.
இதற்கு காயத்ரி ரகுராம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பிறகு 2023 ஜனவரியில் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த ஓராண்டுகளாக அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை. மாறாக அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இதற்கிடையே தான் அவர் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் அந்த கட்சியில் சேரவில்லை.
இந்நிலையில் தான் இன்று காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து காயத்ரி ரகுராம் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். சமீபகாலமாக பாஜகவில் இருந்து விலகும் பிரபலங்கள் அதிமுகவில் இணைந்து வரும் நிலையில் அந்த வரிசையில் காயத்ரி ரகுராமும் இணைந்துள்ளார். இதற்கிடையே தான் அதிமுகவில் இணைந்து ஏன்? என்பது பற்றி காயத்ரி ரகுராம் விளக்கமளித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:
முதலில் அதிமுகவில் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் எனது குடும்பத்தினர் காலம் காலமாக அதிமுகவின் தொண்டர்களாக தான் இருந்தனர். நன்றியை மறக்க கூடாது. எனது குடும்பத்துக்கும், தமிழகத்துக்கும் நிறைய விஷயங்களை அதிமுக செய்துள்ளது. தமிழ்நாடு முன்னேற்றமடைய ஒரேயொரு காரணம் அதிமுக மட்டும்தான். அதிமுகவில் பெரிய தலைவர்கள் இருந்துள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமை வகித்துள்ளனர்
அவர்களுக்கு பிறகு எளிமை மனிதராக அதே நேரத்தில் பெரிய ஆளுமைமிக்க தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். அவரது தலைமையில் அதிமுகவில் இணைய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அதன்படி இன்று அதிமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவில் இணைந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதிமுகவில் நான் எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி இணைந்துள்ளேன்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் எனது அப்பா ரகுராம் அதிமுகவுடன் பயணித்தவர். நேரு ஸ்டேடியம் திறப்பு முதல் பல்வேறு பிரசாரத்தில் எனது அப்பா அதிமுகவுடன் பயணித்துள்ளார். அப்படி அப்பா வழியில் அதிமுகவில் இணைந்தது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இணைந்ததிற்கு இவ்வளவு பாரம்பரியமும், பந்தமும் அடங்கிய விளக்கம் கொடுக்கும் நீங்க, பின்னே ஏன் இதுக்கு முன்னாடி பாஜக வில் இணைந்தீர்கள் என்ற கேள்வி பாஜக வினர் கேட்கும் போது, அதற்கும் ஒரு பதிலை தயாராக வைத்துக்கொள்ளவும் காயத்திரி ரகுராம் அவர்களே என்கின்றனர் அரசியல் குறும்புகார விமர்சகர்கள்.