சேலத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.18) காலை தொடங்கி வைத்தார்.
இளைஞரணி மாநாடு முன்னிட்டு சேலம் மாநகர் முழுவதும் கொடிக் கம்பங்கள், திமுக போஸ்டர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையிலும் பல இடங்களில் இரும்பு கொடி கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மக்கள் உயிரை பணயம் வைத்து தான் விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டுமா என்ன? என அறப்போர் இயக்கம் இதை கண்டித்துள்ளது.
இதுகுறித்து அந்த இயக்கம் தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில்,
”உங்களை வரவேற்க மக்கள் உயிரை பணயம் வைப்பது பற்றி உங்களுக்கு கவலை இருக்கா மு.க. ஸ்டாலின், உதயநிதி?
நெடுஞ்சாலையில் அதுவும் ஒரு மேம்பாலத்தில் இவ்வாறு இரும்பு கொடி கம்பங்களை வைப்பது ஆபத்து என்று உங்களுக்கு தெரியாதா ராஜேந்திரன். பொறுப்புள்ள சட்டமன்ற உறுப்பினர் இது போன்று மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷயத்தை செய்யலாமா?
சட்டமன்ற உறுப்பினராக உங்கள் பணியை சிறப்பாக செய்தாலே உங்களுக்கு மக்கள் மத்தியிலும் உங்கள் கட்சியிலும் நல்ல விளம்பரம் கிடைக்குமே. இப்படி மக்கள் உயிரை பணயம் வைத்து தான் உங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டுமா என்ன?
இவ்வாறு அறப்போர் இயக்கம் தனது X தளத்தில் விமர்சித்துள்ளது.