அரசியல் கட்சி தலைவர்களின் அனல் பறக்கும் பேச்சு, அவர்கள் செயல்படுத்தும் திட்டங்கள் தான் கடந்த கால தேர்தல்களில் ஓட்டுக்களை அறுவடை செய்யும் கருவியாக இருந்தது.
ஆனால், தற்போது மக்களின் மனப்போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அதற்கு ஏற்ப வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.
இதுபோன்ற வியூகங்களை வகுப்பது அரசியல் கட்சிகளுக்கு முடியாத காரியமாக உள்ளது. இதனால் பிரசாந்த் கிஷோர், சுனில் கனுகோலு போன்ற தேர்தல் வியூக வகுப்பாளர்களை பல கோடி ரூபாய் கொடுத்து, தங்களுக்கு தேர்தல் பணியாற்றும் படி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதில் அரசியல் கட்சிகளால் மிகவும் விரும்பப்படுபவர்கள் பிரஷாந்த் கிஷோர். இவர் பாஜக, திமுக, ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் தான் சுனில் கனுகோலு.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பிரிந்த இவர் தற்போது தனியாக தேர்தல் வியூக நிறுவனம் அமைத்துள்ளார். பிரசாந்த் கிஷோருக்கு அடுத்தபடியாக இவருக்குத்தான் தற்போது அரசியல் கட்சிகளிடம் கிராக்கி நிலவுகிறது.
கர்நாடகா, தெலுங்கானாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு மூளையாக செயல்பட்டவர் சுனில் கனுகோலு. இவர் வகுத்திருந்த திட்டங்களை பின்பற்றியதாலே அம்மாநிலங்களில் காங்கிரஸ் சமூக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் தேர்தல் திட்ட வகுப்பாளர் சுனில் கனுகோலு இடம் பெற்று இருந்தார். இவர் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு திட்டங்களை வகுத்து தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுனில் கனுகோலு காங்கிரசுக்கு ஆலோசனை வழங்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து அவர் விலகி இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.