சினிமா நடிகராக இருந்தபோது அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்ற கேள்வியை அடிக்கடி சந்தித்த உதயநிதி வரவே போவதில்லை என்றார் ஓரிரு மாதங்களில் அதை பொய்யாக்கியவருக்கு திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
பின்பும் நடிப்பை விடாதவருக்கு, தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டு எம்எல்ஏ ஆக்கப்பட்டார். ஆளும் கட்சியின் அடித்த அடுத்த வாரிசாக பார்க்கப்பட்ட வரை நோக்கி எழுந்த கேள்விகள் எல்லாமே, 'எப்போது அமைச்சராவீர்கள்" என்பதாகத்தான் இருந்தது. என்னைவிட சீனியர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் என்றெல்லாம் கூறி வழக்கம்போல் மறுத்துவரை, சில மாதங்களிலேயே அமைச்சர் பதவி அலங்கரித்தது.
அதன்பின்பும் அவரைவிடாமல் துரத்திய கேள்விகளும் பேச்சுக்களும், விரைவில் துணை முதல்வராக போகிறார் என்பதாகத்தான் இருந்தது. அதற்கான காரணமும் சூழலும் சரியாக சொல்லப்பட்டதால், அவரது கட்சியினரால் கூட மறுக்க முடியாமல் போனது. இம்மாதம் இறுதியில் முதல்வர் வெளிநாட்டுக்கு செல்ல உள்ளார். அதன் முன்பே உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது என்றும், அதை வலியுறுத்தி சேலம் இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றும் ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேச்சு பலமாக அடிபட்டது.
எப்போதும் போல் அதை நிராகரித்த உதயநிதி, இதில் முடிவெடுக்க வேண்டியவர் முதல்வர்தான் என்கிற ரீதியில் பதில் அளித்தார். அதனால் துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்க போகும் நாள் கூட குறிக்கப்பட்டதாகவும் வரும் 25-ல் தைப்பூச நன்னாளில் அவர் பதவியேற்கப் போவதாகவும் தகவல்கள் பரவின. இந்த சூழலில் அதெல்லாம் வெறும் வதந்தி என சொல்லி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் முதல்வர்.
இருப்பினும், கடந்த காலங்களில் உதயநிதியின் அரசியல் கேள்விகள் அனைத்தும், அரசியலுக்கு வருவீர்களா தொடங்கி அமைச்சர் ஆவீர்களா வரை முதலில் மறுக்கப்பட்டு பின் நடந்தேறியது. அது போலவே தற்போதைய துணை முதல்வர் கேள்வியும் இருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
எல்லாவற்றிலும் ஒரு முற்றுப்புள்ளி உண்டுதானே!