வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாரோடு கூட்டணி என்ற அறிவிப்பை இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாரோடும் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு சீமானால் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியானது, தற்போது வரை 13 ஆண்டு காலம் தேர்தலில் யாரிடமும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிட்டு வருகிறது.
முதல் முறையாக 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சேர்த்து நான்கு லட்சம் வாக்குகளை பெற்றது. அதாவது 1.1 சதவீதம் வாக்குகளை பெற்றது. இந்த வாக்குகள் என்பது அன்றைய சூழலில் திமுக தோற்பதற்கு காரணமாக அமைந்தது என்று அன்றைய தினம் பேசப்பட்டது.
அதன் பின் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 17 லட்சம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் செய்யாத அளவில் ஆண், பெண் இருவரும் சமம் என்ற வகையில் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தினார். சுமார் 30 லட்சத்திற்கும் மேல் வாக்குகளை பெற்று 7 சதவீதம் அளவிற்கு வாக்கு சதவீதத்தை பெற்றது நாம் தமிழர் கட்சி. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறிப்பிட்ட அளவு வாக்காளர்கள் அக்கட்சிக்கு இருக்கிறார்கள் என்பதை காட்டிய தேர்தலாக 2021 தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு அமைந்தது.
விஜயகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பித்து அவருடைய கட்சி எந்த அளவிற்கு தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை எதிர்நோக்கி சென்றதோ, அதுபோல 2010 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்த நாம் தமிழர் சீமான் கட்சியானது அதேபோல மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருவதை உணர்ந்த அரசியல்கட்சிகள், தற்போது சீமானுடன் கூட்டணி ஏற்பட்டால் நம் கட்சியானது வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை எட்டும் என்ற நிலை தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளதாக பிற கட்சிகள் கருதிவருவதாக சொல்லப்படுகிறது.
தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளோடு ஒருபோதும் தான் கூட்டணி வைக்க மாட்டேன் என்பதில் நாம் தமிழர் கட்சி சீமான் உறுதியாக உள்ளார். அதையேதான் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் அவர் உறுதிபட தெரிவித்துவிட்டார். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு தேசிய கட்சியுடனும், திராவிட கட்சிகளோடும் நாம் தமிழர் கட்சி கூட்டணி கிடையாது. தனித்து மட்டுமே போட்டியிடும். மக்களுடன் மட்டும்தான் கூட்டணி என்று தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி சீமான்.
வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெறக்கூடிய வாக்கு சதவீதங்கள் என்பது தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்களால் கணிக்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக அதிமுகவிற்கு மாற்றாக தொடங்கப்பட்ட மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் ஒரு கட்டத்தில் அந்த கட்சிகளோடு கூட்டணி வைத்து இன்று ஒரு சீட்டுக்கும், இரண்டு சீட்டுக்கும் அவர்களை சார்ந்து இருக்கக்கூடிய ஒரு அவல நிலை அரசியல் எல்லாவற்றையும் கண்கூடாக சீமான் பார்த்து வருவதால், கடைசி வரை, அதாவது வெல்லும் வரை தனித்தே போட்டி என்று பொதுக்குழுவில் திட்டவட்டமாக அறிவித்து விட்டாராம் நாம் தமிழ் கட்சி சீமான். இது நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை சேர்க்கும் என்று அக்கட்சியினர் கருதுகின்றனர்.