தமிழக அரசியல் கள நிலவரம் எப்படி உள்ளது, அதிமுக கூட்டணி வேண்டுமா, தனித்துப் போட்டியிடலாமா, மற்ற கட்சிகளின் நிலை உள்ளிட்டவைகள் தொடர்பாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தமிழக பாஜகவில் உள்ள 15 முக்கிய மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்தலைவர்கள் எச்.ராஜா, மாநில துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் தங்களின் கருத்தை எழுதி மூடி சீலிடப்பட்ட கவரில் டெல்லிக்கு தபாலில் அனுப்பி உள்ளனர்.
தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளுக்கு 12 முதல் 13 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கட்சி மேலிடம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், தமிழகத்தில் பாஜகவிற்கு ஓட்டு சதவீதம் எவ்வளவு உயர்ந்திருக்கும் என கணிக்கப்படுகிறது, லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடலாமா, சிறிய கட்சிகளின் நிலை என்ன, அதிமுக உடனான உறவு எப்படி உள்ளது, அக்கட்சியோடு கூட்டணி அமைப்பது சாத்தியமா என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நிர்வாகிகளும் தங்களின் கருத்தை விரிவாக எழுதி நட்டாவுக்கு அனுப்பி விட்டனர்.
அதன் அடிப்படையில் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது என தமிழக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.