எடப்பாடி சிறைக்குச் செல்வார் எனப் பேசத் தொடங்கியதிலிருந்து, தொண்டர்கள் மீட்புக் குழு ஒன்றை அமைத்து கூட்டம் போடுவது வரை இபிஎஸ் க்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டே வருகிறார் ஓபிஎஸ். இதன் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறதா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பாஜக - அதிமுக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டாலும், இதெல்லாம் போலியானது, நாடகம். தேர்தல் நேரத்தில் இருவரும் இணைந்துகொள்வார்கள் என்ற பேச்சு எழ, பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் தெளிவாக இருப்பதாக சமீபத்தில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததோடு, தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியைச் சந்திக்கவும் மறுத்துவிட்டார்.
இதனால், ஓ.பி.எஸ் மூலமாக எடப்பாடிக்கு பா.ஜ.க, செக் வைக்கவே நினைக்கிறது. அதனால்தான் எடப்பாடி பற்றி ஓபிஎஸ் யை பேசவைத்து வேடிக்கைப் பார்க்கிறார்கள் பாஜக. ஓபிஎஸ்சும் எடப்பாடி திகார் செல்வது உறுதி எனப் பேசுவது மட்டுமல்லாமல், தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, பொதுக்குழு தொடர்பான வழக்குகள், பிரதமரிடம் ஏதோ ஃபைலைக் கொடுத்துவிட்டு, அதை எடப்பாடிக்காகக் கொடுத்தேன் என்பதுபோல பேசுவது, எனத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.
ஓ.பி.எஸ் மூலம் மட்டுமல்ல, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவுசெய்வதற்காக ஜன.,30 மற்றும் 31-ல் அ.தி.மு.க பொதுச்செயலாளர் இ.பி.எஸ் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன்மூலம், நீதிமன்றங்கள் மூலமும் நெருக்கடி கொடுக்கத் தயாராகிறார்களோ என்ற எண்ணம் உருவாகிறது” என்கின்றனர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்.
ஓபிஎஸ், எடப்பாடி, பாஜக முக்கோண அரசியல் ஆட்டத்தில் இன்னும் சூடு கிளம்பும் போல. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!