விஜயகாந்தை கருப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்லக் கூடாது என்பது தான் அதிமுக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையின் போது 2011ல் ஜெயலலிதா போட்ட முதல் கண்டிஷன் என பண்ருட்டி ராமச்சந்திரன் ஃபிளாஷ்பேக் பகிர்ந்துள்ளார்.
ஆனால் அதற்கு விஜயகாந்த் ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறிய பண்ருட்டி ராமச்சந்திரன், 2011 சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இணைய விஜயகாந்த் தயக்கம் காட்டியதாகவும் நான் தான் அவரை சரிகட்டினேன் எனவும் கூறியிருக்கிறார்.
தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பண்ருட்டி ராமச்சந்திரன் கீழ்கண்டவாறு கூறுகிறார் :-
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என ஜெயலலிதா விரும்பினார். எனவே இதற்கான முயற்சிகளை துக்ளக் சோ தான் முழுமையாக முன்னெடுத்தார். ஒரு கட்டத்தில் விஜயகாந்த் பிடி கொடுக்கவில்லை. எனவே, இதற்கு மேல் என்னால் முடியாது என சோ சோர்ந்து போய்விட்டார். அப்போது நான் தான் விஜயகாந்தை சரிகட்டி அதிமுக கூட்டணியில் இணைய வைத்ததேன். அதனால் தான் அவர் அன்று எதிர்க்கட்சித் தலைவராக வர முடிந்தது எனவும் கூறியுள்ளார் பன்ருட்டி ராமச்சந்திரன்.
ஜெயலலிதாவை எதிர்க்க வேண்டாம் என விஜயகாந்திடம் தாம் எடுத்துக் கூறியதாகவும் ஆனால் அவர் தன் பேச்சை கேட்கவில்லை எனவும் இதனால் தான் தாம் தேமுதிகவிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தேமுதிகவில் பண்ருட்டி ராமச்சந்திரன் அவைத்தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சில நேரங்களில் விஜயகாந்த் முடிவுகளை திடீர் திடீரென்று மாற்றுவார் என்றும் இது தனக்கு சரிபட்டு வரவில்லை எனவும் கூறிய பண்ருட்டி ராமச்சந்திரன், பிரயோஜனம் இல்லாமல் உழைத்து என்ன பயன் என்பதால் அவரை விட்டு விலக நேர்ந்ததாக தெரிவித்தார். விஜயகாந்த் மறைவுக்கு திரண்ட கூட்டம் அவர் மீதான அனுதாபத்தால் திரண்ட கூட்டமே தவிர, அது தேமுதிகவின் அரசியல் எழுச்சிக்கு பயன்படாது எனவும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக, தனிக்கட்சி, தேமுதிக, மீண்டும் அதிமுக, ஓ.பி.எஸ். அணி என அரசியலில் எல்லா பக்கமும் ரவுண்டு அடித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.