பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அடுத்த டார்கெட் அமைச்சர் மூர்த்தியா என்ற விவாதம் மதுரை மாவட்ட பாஜக, திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
ஏனெனில் இன்று மதுரையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, தமிழக பத்திரப்பதிவுத் துறையை வெளுத்து வாங்கினார். அதுமட்டுமல்ல பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு முன்பு பாஜக போராட்டம் நடத்தும் என்ற புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது அண்ணாமலை கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில் இப்போது அமைச்சர் மூர்த்தி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார்.
தமிழக பத்திரப்பதிவு அலுவலங்களில் புரோக்கர்கள் லாபி நடப்பதாகவும் பத்திரப்பதிவின் போது கூடுதலாக வசூலிக்கப்படும் பணம் அமைச்சருக்கானது என்று கூறுகிறார்கள் எனவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார். பத்திரப் பதிவுத்துறையில் ஊருக்கு ஊர் புரோக்கர்கள் இருப்பதாகவும் சாடிய அண்ணாமலை, பத்திரப்பதிவுத் துறையை பணம் வசூலிக்கும் துறையாக அமைச்சர் மூர்த்தி மாற்றி வைத்திருக்கிறார் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் மாலை 5 மணிக்கு மேல் சோதனை நடத்தினால் கட்டுக்கட்டாக பணத்தை எடுக்கலாம் என்று கூறிய அண்ணாமலை, அந்தப் பணத்தின் மூலம் தமிழகத்தின் கடனை அடைத்துவிடலாம் என்றார்.