தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம் என்பதை முதல் வேலையாக விசாரிப்போம் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்.
2008-ம் ஆண்டு கருணாநிதி நேரடியாக வந்து தர்மபுரியில் ஒகேனக்கல் திட்டத்தை தொடங்கி வைத்தார். 80 சதவீத வேலை முடிக்கப்பட்டது. இன்னும் 4 மாதங்கள் நாம் ஆட்சியில் இருந்திருந்தால் 100 சதவீத பணியை முடித்து இருப்போம்.
ஆனால் தேர்தல் வந்துவிட்டது. தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாம் எதிர்க்கட்சியாக மாற்றப்பட்டோம். ஆளும் கட்சியாக அ.தி.மு.க. வந்தது. அந்த 20 சதவீத வேலையைக் கூட முடிக்க முடியாமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவது தான் எங்களுடைய முதல் வேலை.
அமைச்சர் கே.பி.அன்பழகன் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. பாலக்கோடு அருகே இருக்கக்கூடிய தூள்செட்டி ஏரி உள்பட பல ஏரிகளுக்கு தென்பெண்ணை ஆற்றின் தண்ணீரை கால்வாய் அமைத்து ஏரிகளுக்கு தண்ணீர் விடுவது தொடர்பாக 2016-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நாம் சொல்லி இருந்தோம். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் கே.பி.முனுசாமியின் எஸ்டேட் பாதிக்கப்படும் என்று அதைத் தடுத்து கொண்டிருக்கிறார் என்று ஊரே இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கிறது.
இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரைக்கும் அவர் ஏதோ படிப்படியாக வளர்ந்து முதல்-அமைச்சர் ஆனேன் என்று ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக வந்தவுடன் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அவருக்கு என்ன உடல்நல பாதிப்பு என்று யாருக்காவது தெரியுமா? என்றால் யாருக்கும் தெரியாது.
அண்ணா மறைந்தபோது, 4 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு என்ன மருத்துவ சிகிச்சை செய்கி றார்கள்? என்பதை எல்லாம் ஒரு நாளைக்கு 2 முறை அரசாங்கம் வெளியில் சொல்ல வேண்டும். அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த சாதிக் பாஷா, வெளியே வந்து சொல்வார். அதுதான் முறை. அதுதான் மரபு.
அதேபோல எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது அவர் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எச்.வி.ஹண்டே, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே வந்து சொல்லிக் கொண்டிருப்பார்.
ஆனால் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருக்கும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்காக போராடிக்கொண்டிருந்த நேரத்தில் கூட உண்மையை சொல்லவில்லை. கவர்னர் வந்தார். மத்திய மந்திரிகள் வந்தார்கள்.
வெளி மாநிலத்தில் இருந்து முதல்-மந்திரிகள் வந்தார்கள். நானும் சென்றிருந்தேன். யாரையும் பார்க்க விடவில்லை. வாசலில் நிற்க வைத்து பேசி அனுப்பி விட்டார்கள். ஏனென்றால் அவ்வளவு மர்மமாக வைத்திருந்தார்கள்.
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணத்தை கூட கண்டுபிடிக்க முடியாமல் மூடி மறைத்துக்கொண்டிருக்கக்கூடிய ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. நான் இப்போது சொல்கிறேன், இன்னும் 4 மாதங்களில் தி.மு.க. தமிழ்நாட்டில் உங்கள் அன்போடு ஆதரவோடு ஆட்சிக்கு வரப்போகிறது.
ஆட்சிக்கு வந்தவுடன், நீங்கள் சொன்ன கோரிக்கைகளை எல்லாம் நிறை வேற்றுகிறோம், அதுமட்டு மில்லாமல் ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம் என்பதையும் முதல் வேலையாக செய்யப்போகிறோம் என்று அவர் பேசினார்.
இதேபோல் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘எடப்பாடி தொகுதிக்கு முதல்-அமைச்சரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் 234 தொகுதிகளுக்கும் அவர் எப்படி செய்ய முடியும். இவரது ஆட்டமெல்லாம் தேர்தல் வரும்போது முடிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு முன்னதாகவே சசிகலா விடுதலையாகி வந்தவுடன், இவரது பதவிக்கு ஆட்டம் வரப் போகிறதா இல்லையா என்று பாருங்கள்’ என்று கூறினார்.