ஐயப்பனை தரிசனம் செய்யப்போகும் பக்தர்கள் எத்தனையே வேண்டுதல்களை வைத்து வரும் நிலையில் சிறுமி ஒருவர் திருமாவளவன் எம்.பி மத்திய அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு, மகர ஜோதி தரிசனத்திற்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அலை அலையாக பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வந்து கொண்டு உள்ளனர்.
சிறுவர்கள், சிறுமியர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என பலரும் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்கள் பலரும் எத்தனையோ வேண்டுதல்களை வைத்து வழிபட்டு செல்லும் போது, சிறுமி அனிஷ்காவின் வேண்டுதல் பலரது கவனத்தையும் கவர்ந்தது.
சிறுமியின் கையில் மிகப்பெரிய பேனர் இருந்தது. அதில் நாளைய மத்திய அமைச்சர் திருமாவளவன் என்று எழுதப்பட்டிருந்தது. அந்த பேனரை கையில் பிடித்துக்கொண்டு மலை ஏறினார் சிறுமி அனிஷ்கா.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன். அவருக்கு கடவுள் நம்பிக்கை பெரிதும் இல்லை. இந்துக்களின் வழிபாட்டு முறை, பழக்க வழக்கங்கள் குறித்து அதிகம் பேசுவார். கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு தனது ஆதரவாளர்கள் 4 பேர் வருகின்றனர். இக்கடிதத்தை, கொண்டு வரும் நபர்களுக்கு வி.ஜ.பி. பாஸ் வழங்கி மேற்கொண்டு உதவிகளை செய்யுமாறு கேட்டுகொள்கிறேன் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்ட கடிதம் கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இந்த ஆண்டு திருமாவளவன் மத்திய அமைச்சராக வேண்டும் என்ற வேண்டுதலுடன் சிறுமி ஒருவர் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.