திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும், தமிழக அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் என்ற அடையாளமும் அவருக்கு உண்டு.
தமிழ்நாட்டில் தற்போது பெரும்பாலான நிர்வாக பணிகளை மேற்பார்வையிடுவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான். மேலும், முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் ஆட்சியில் நிர்வாக ரீதியாக முக்கியமான பல நிகழ்வுகளை கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.
திமுகவில் உதயநிதிக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. அப்படி என்றால், அடுத்தகட்டம் என்பது என்ன? ஒரு பெரிய பதவி. உதயநிதியைத் துணை முதல்வராக்குவதற்கு ஆளுநர் அனுமதி தேவையில்லை. ஒரு அரசாணை வெளியிட்டாலே போதும்.
இதைப்போல மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஸ்டாலினுக்காக அப்படி ஒரு அரசாணை போடப்பட்டுள்ளது. அதற்கு முன்மாதிரி ஏற்கெனவே இருக்கிறது. அதே வழியைப் பின்பற்றலாம்.
ஆகவே, சில செய்திகளின்படி, பிப்ரவரி மாத வாக்கில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படலாம் என்ற யூகச்செய்தி திமுக வட்டாரத்திலேயே இருந்து வருகிறது.