திமுக மகளிர் உரிமை மாநாடு அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிலையில், இந்த மாநாடு நடத்தப்பட்டதற்கான காரணம் வேறு என்று கூறி கனிமொழியை பங்கம் பன்னியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் தனது பாதயாத்திரையை திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் தொடங்கியுள்ளார் அண்ணாமலை. சேவூர் சாலையில் துவங்கிய இந்த பாதயாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை பேசுகையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் திமுக ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பெண் தலைவர்களை அழைத்து வந்து மகளிர் உரிமை மாநாடு என நடத்தி இருபக்கின்றனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டிருந்தார். பிரதமர் மோடி 33 சதவீத இட ஒதுக்கீட்டில் முதல் தலைமுறை பெண்கள் அரசியலுக்கு வருவதை விரும்புகிறார். குடும்ப அரசியலை நடத்தி வரக்கூடிய கனிமொழி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்காக அல்ல.
இந்த மாநாடு நடத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் வேறு. சனாதனம் குறித்து பேசியதன் காரணமாக இந்தியா முழுவதும் எதிர்வினையாற்றியதால் பிரபலமடைந்த உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சியை கண்டு தானும் பிரபலமடைய வேண்டும் என கனிமொழியால் நடத்தப்பட்ட ஒரு மாநாடு தான் சென்னையில் நடத்தப்பட்ட மகளிர் உரிமை மாநாடு. வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். பாஜகவிற்கு மீண்டும் வாய்ப்பளிப்பார்கள்." எனத் தெரிவித்தார்.