கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரத்தை பாஜக தீவிரமாக கையில் எடுத்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்து அரசால் வெளியிடப்பட்ட 2 புத்தகங்களை அண்ணாமலைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கோவில் சொத்துகளை அபகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெலுங்கானாவில் பேசியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் பாஜகவினர் இந்த பிரச்சனையை தீவிரமாக கையில் எடுத்தனர். கடந்த 2 ஆண்டுகளில், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது திமுக அரசு எடுத்த நடவடிக்கையை, தமிழக மக்களுக்கு வெளிப்படையாகக் கூற முன்வருவார்களா? அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு,
மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்ட கோயில் நிலங்களின் முதல் பாக புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் மீட்கப்பட்ட நிலங்களின் விவரங்களை நாங்கள் தெரிவித்துள்ளோம். கடந்த 2 மாதங்களுக்கு முன் மீட்கப்பட்ட கோயில் நிலங்களின் இரண்டாம் பாக புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
பாஜகவின் விபி துரைசாமி கேள்வி எழுப்பியபோது, இரண்டாம் பாக புத்தகத்தை அவருக்கு அனுப்பி வைத்தோம். ஆகவே, இதில் எந்தவிதமான ஒளிவு மறைவு இல்லை. யார் நிலத்தை அபகரித்து வைத்திருந்தார்கள், எவ்வளவு நிலம் என்பதை விவரமாக அறிவித்துள்ளோம். யார் கேட்டாலும், இந்த புத்தகத்தை அனுப்பி வைக்க இந்து சமய அறநிலையத்துறை தயாராக உள்ளது.
இந்த ஆண்டு முடிவடைந்த பிறகு ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்த புத்தகங்களின் மூன்றாம் பாகம் வெளியிட உள்ளோம். ஆக்கிரமிப்பில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்து அரசால் வெளியிடப்பட்ட 2 புத்தகங்களை அண்ணாமலைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அவரது அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்துவிட்டோம்.
திமுக ஆட்சியின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணியதே ஆன்மீகத்தை வைத்து தான். திமுக ஆட்சிக்கு வந்தால் இந்து ஆலயங்கள் பராமரிக்கப்படாது, பாதுகாக்கப்படாது என்ற பொய் பிரச்சாரத்தை முன்வைத்து வந்தார்கள். இந்த பொய் பிரச்சாரத்தை பொய்யாக்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். குற்றச்சாட்டுகளை வைக்க வைக்க எங்களது பனியின் வேகம் அதிகரிக்கத் தான் செய்யுமே தவிர குறையாது எனத் தெரிவித்துள்ளார்.