இந்திய அரசியலின் சிறந்த ராஜதந்திரியாக டாக்டர் கலைஞர் அவர்களை சொல்லுவார்கள். ஆனால் தற்போது கலைஞரைப் போலவே ராஜதந்திரியாக எடப்பாடி பழனிச்சாமி விளங்குகிறார் என்பதுதான் உண்மை.
கலைஞரைப் போல எழுத்தாற்றல், பேச்சாற்றால், வசீகரிக்கும் காந்தக்குரல், தோற்றப் பொலிவு இல்லையென்றாலும், அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தி வெட்டுவதில் எடப்பாடி ராஜதந்திரிதான் அதில் சந்தேகமேயில்லை.
ஜெயலலிதா அம்மையார் மறைவிற்குப் பிறகு ஓபிஎஸ்ஸைப் பற்றி சசிகலாவிடம் போட்டுக் கொடுத்து முதலில் பிரிவினையை உண்டு பண்ணினார். பின்னர் சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் ஆனார். அதன்பிறகு டி.டி.வி.தினகரனை பந்தாடி கட்சியை விட்டு வெளியேற்றினார்.
பின்னர் ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்த்து நான்கரை ஆண்டுகால ஆட்சியை சிறப்பாக முடித்தார். பின்னர் பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு விரட்டினார். நீதிமன்றத்திற்கு ஓபிஎஸ்ஸை போக வைத்து கட்சியின் சின்னத்தையும், அலுவலகத்தையும் கைப்பற்றினார்.
இவை அனைத்திற்கும் பாஜகவை நண்பனாக, உற்ற தோழனாக காண்பித்துக் கொண்டு அனைத்தையும் கனக்கச்சிதமாக செய்து முடித்தார்.
கொங்கு மண்டலத்தில் வலிமையான தலைவராக உருவெடுக்கும் செந்தில் பாலாஜியை அண்ணாமலையோடு மோத விட்டு செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்வை அஸ்தமிக்க வைத்து விட்டார்.
தனது காரியங்கள் அனைத்தும் முடிந்தப் பிறகு மதுரையில் மாநாட்டை நடத்தி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்திய பிறகு இறுதியில் பாஜகவையும் தமிழ்நாட்டு கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு விட்டார்.
எடப்பாடியின் இந்த அதிரடி முடிவை பாஜகவின் நிர்வாகிகளால் நம்பமுடியவில்லை. அவர்கள் அதிலிருந்து முழுமையாக இன்னும் மீண்டு வரமுடியவில்லை என்பதே உண்மை.
இப்போது "இந்தியா" கூட்டணியை உடைக்க முக்கிய பத்திரிக்கையாளர்கள் பல்வேறு கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார்களாம்.
- பெ.செந்தில்குமார்