அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகள் இடையே இருந்து வந்த கூட்டணி முறிந்து விட்டதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி விட்டது.
இந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவித்து இருப்பது பற்றி பல்வேறு கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
மறைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அறிஞர்அண்ணா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசிவருவதும், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக தோற்றது என கருதுவதாலும் தான் தற்போது அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகி உள்ளது என ஒரு புறம் சொல்லப்பட்டாலும்,
மதுரை அ.தி.மு.க மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சி தமிழர் என பட்டம் சூட்டப்பட்டது. ஆனால், அது சும்மா பேருக்கு சூட்டப்படவில்லை. அதன் பின் மிக நுட்பமான அரசியல் உள்ளது என விவரிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதாவது, அ.தி.மு.க வின் அடையாளங்களாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரண்டு முகங்கள் உள்ளன. அந்த இரண்டு முகங்கள் கடந்து அ.தி.மு.கவில் மூன்றாவது ஒரு முகம் தொடங்குகிறது என்பதை உணர்த்துவதர்காகத்தான் புரட்சி தமிழர் என்ற பட்டம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் ஓர் அதிரடியாக, புரட்சியாளராக வர விரும்பும் புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமியை, பாஜக அண்ணாமலை அவமதித்து சீண்டும் போது அதை எடப்பாடி பழனிச்சாமி அனுமதித்தால் அவர் புரட்சி தமிழரா? அதிமுக தொண்டர்கள் பின் எப்படி அவரை புரட்சி தமிழர் என அங்கிகரீப்பார்கள்?
இந்த நிலையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும்பாலோனோரின் விருப்பத்திற்கு இணங்க, பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகுகிறது என அதிமுக தலைமை இன்று அறிவித்ததும், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள்.
அம்மாவை போலவே அதிரடியாக தைரியமாக துணிச்சலாக எடப்பாடியார் இன்று முடிவை எடுத்துள்ளார். மோடியா லேடியா என்று அம்மா கேட்டது போல் இன்று எடப்பாடியாரின் கூட்டணி விலகல் முடிவு உள்ளது. புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை அவர் நிரூபித்து விட்டார் என அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை தற்போது கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இதைத்தான் எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்த்தார். அதனால் தான் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகல் முடிவை எடுத்துள்ளார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மொத்தத்தில் தேர்தல் திருவிழா தமிழகத்தில் தொடங்க ஆரம்பித்து விட்டது. இனி ஒவ்வொருநாளும் தேர்தல் சரவெடிதான்.