நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கட்சிகளுக்கு இடையே மட்டும் அல்லாமல் கூட்டணி கட்சிகளுக்கு உள்ளேயும் பல அரசியல் மல்லுகட்டுகல் அரங்கேறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கும் விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அ.தி.மு.கவிற்கும் பா.ஜ.கவிற்கும் இடையிலான உறவு அவ்வளவு நெருக்கமானதாக இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், அதனை உறுபடுத்தி படுத்தும் விதமாக தற்போது பாஜக அதிமுக இடையே நடக்கும் மல்லுகட்டு வெளிச்சம் போட்டு காட்டுகிறது
1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழா ஒன்றில் பேரறிஞர் அண்ணா, தான் பேசிய கருத்துக்கு அவர் மன்னிப்புக் கோரியதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒரு கருத்தை தெரிவிக்க, ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று திராவிட இயக்கங்கள் மறுப்பு தெரிவிக்க, தி.மு.கவோ இந்த விசயத்தில் `கப்சிப்’ பென இருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த அ.தி.மு.க., அண்ணா மீது அண்ணாமலையின் அவதூறு கருத்துக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன். என கூறியுள்ளார்.
ஒரிரு மாதங்களுக்கு முன்பு ஓர் ஆங்கில நாளிதழுக்கு பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த அளித்த பேட்டியில் அவரிடம், "1991-96க்கு இடைப்பட்ட காலம்தான் மிக அதிக அளவில் ஊழல் நிறைந்த காலகட்டங்களில் ஒன்று என்பதை ஏற்பீர்களா?" எனக் கேட்கப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, "தமிழ்நாட்டில் பல நிர்வாகங்கள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. ஊழலில் நம்பர் ஒன் மாநிலம் என்றுகூட சொல்வேன்," என்று பதிலளித்தார். ஜெயலலிதாவை தான் அண்ணாமலை இப்படி சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.
இதனால் கடும் டென்ஷனான அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகள் பலரும் பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்யனர்.
இப்படி கடந்த கால மோதல் நடந்து முடிந்திருக்க கூடிய நிலையில், தற்போது அண்ணா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய விவகாரத்தால், அம்மா , அண்ணாவை பற்றி தவறாக பேசும் போது அண்ணாமலை நமக்கெதற்கு என்ற மனநிலைக்கு அதிமுகவினர் வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிரதிபதிப்பு தான் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம் ஆகியோரது பாஜக, அண்ணாமலைக்கு எதிரான பேச்சுகள் மூலம் அறிய முடிகிறது.
ஒரே கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளும் இப்படி யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி இணைந்து ஓட்டுக் கேட்பது என்பது தான் சாமானிய பாஜக அதிமுக தொண்டனின் கேள்வியாக உள்ளது. அதிமுக தலைமையும், பாஜக தேசியத் தலைமையும் கூட்டணியை தொடந்தாலும் கூட இரண்டு கட்சிகளின் கீழ்மட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் மனமுவந்து செயல்படுவார்களா என்பது சந்தேகமே!