நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பித்த விஜய் பெயரிலான கட்சியில் இருந்து விலகுவதாக அதன் தலைவர் பத்மநாபன் என்ற ராஜா அறிவித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ சந்திரசேகர் தனது மகன் விஜய் நடிக்க வந்த பிறகு 1993 முதல் விஜய் ரசிகர் மன்றம் தொடங்கி ரசிகர்களையும், விஜய்யையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். விஜய் ரசிகர் மன்றம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்றும் கூறியிருந்தார் சந்திரசேகர்.
அதனையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நவம்பர் 5 ஆம் தேதியன்று, தேசியக் கட்சியாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய விண்ணப்பித்தார்.
இந்தப் புதிய கட்சிக்கு பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர், தலைவராக திருச்சியைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் பத்மநாபன் என்கிற ஆர்.கே ராஜா, பொருளாளராக ஷோபா சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
கட்சி தொடங்கியது பற்றி விளக்கம் அளித்த எஸ்.ஏ சந்திரசேகர், 25 வருடங்களாக நான் இந்த அமைப்பை நடத்திவருகிறேன். என்னுடன் விஜய் ரசிகர்கள் பலர் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு ஓர் அங்கீகாரம் வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இது முழுவதும் நான் எடுத்த முடிவு மட்டுமே. விஜய்க்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினார் சந்திரசேகர்.
ஆனால், தந்தையின் இந்த அரசியல் நடவடிக்கை பிடிக்காத நடிகர் விஜய் எனக்கும், என் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை. எனது பெயரையோ, புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் தந்தைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.அந்தக் கட்சியில் பொருளாளராக நியமிக்கப்பட்ட விஜய்யின் தாயார் ஷோபாவும் கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில், `தான் உயிருக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், தனக்கோ தனது குடும்பத்தாருக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் புஸ்ஸி ஆனந்த்தான்’ என்று வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பத்மநாபன் என்ற ராஜா.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தொடங்கிய கட்சியின் தலைவர் பொறுப் பிலிருந்து ராஜினாமா செய்து கொள்வதாக அறிவித்திருக்கிறார்.