தூத்துக்குடி சம்பவம் குறித்து கோடிகளுக்கு விலை போன கம்யூனிஸ்டுகளுக்கு நாவடக்கம் தேவை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘வீதி வீதியாக உண்டியல் குலுக்கி சேர்க்கும் பணத்தில், டீ குடித்து கட்சிக்காக உழைத்த கம்யூனிஸ்ட் தொண்டர்களின் தியாகங்களை மண்ணில் போட்டு மிதிக்கும் வகையில் இன்றைக்கு தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து பல கோடிகளைப் பெற்று தங்கள் இயக்கத்தையே அறிவாலயத்தின் கொத்தடிமையாக மாற்றியுள்ளார்கள்.
தற்போதைய பொம்மை முதலமைச்சரின் குரலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருக்கக்கூடிய திரு. K. பாலகிருஷ்ணன் அவர்கள் திமுக சொல்வதையெல்லாம் மென்று விழுங்கி மீண்டும் வாந்தி எடுத்துள்ளார்.
திரு. பாலகிருஷ்ணன், அவருடைய வாயை வாடகைக்கு விடுவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பது போல் ஆற்றல்மிகு எங்கள் இயக்கத்தின் இடைக்காலப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் அருமை அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புபடுத்தி முறையற்ற கருத்துக்களை உமிழ்ந்திருக்கிறார்.
திரு. பாலகிருஷ்ணன் அவர்கள், திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு எடுத்த நடவடிக்கைகளை மறைத்து பேட்டி அளித்துள்ளதைப் பார்க்கும்போது, தேர்தல் நேரத்தில் திமுக-விடமிருந்து கம்யூனிஸ்ட் கட்சி, தேவையான தேர்தல் நிதியை பெற்றதாக பத்திரிகைகளில் வந்திருந்த செய்தியினை உறுதிப்படுத்துகிறது. அதற்கு நன்றிக் கடனாக திரு. பாலகிருஷ்ணன் இப்போது செயல்படுகிறார்.
திரு. பாலகிருஷ்ணன் கொள்கைப் பிடிப்புள்ள உண்மையான கம்யூனிஸ்ட் இயக்கத் தொண்டர்களை களங்கப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம். இனியாவது கம்யூனிஸ்ட் கட்சி தனித்தன்மையுடன் செயல்படும் என்று எதிர்பார்க்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.