'அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து செல்வதே, அரசியல் தலைவர்களின் முதல் பண்பாக இருக்க வேண்டும். விருப்பு வெறுப்பு இன்றி அரசியலில் பயணிக்க வேண்டும்,' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அரசியலில் சாதிக்க நினைப்பவர்களுக்காக, 'அஸ்பயர்’ கல்வி நிறுவனம், 'தலைவா' என்ற பெயரில், 3 நாட்கள் பயிற்சி வகுப்பை, சென்னையில் நேற்று துவக்கியது. பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
அரசியல்வாதிகள் தங்கள் பணியில் வெற்றி பெற பயிற்சி தேவை. காமராஜர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என, ஒவ்வொரு கால கட்டத்திலும் வந்த தலைவர்கள், தங்களுக்கு என தனி பண்புகளை கொண்டிருந்தனர்.
அசாதாரண சூழ்நிலை
பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அசாதாரண சூழ்நிலையில் இருந்து வளர்ந்து வந்தவர்கள். பிரதமர் மோடி, 1985ல் பா.ஜ.,வில் இணைந்ததில் இருந்து, 17 ஆண்டுகள் முழு அரசியல்வாதியாக செயல்பட்டு, உச்சகட்ட நிலையை அடைந்தவர்.
காங்., கோட்டையாக இருந்த குஜராத்தை, பா.ஜ., கோட்டையாக மாற்றி உள்ளார். அதேபோல ஒபாமா, கறுப்பினத்தில் பிறந்து, பல அசாதாரண சூழ்நிலையை கடந்து, அரசியலில் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் 60 முதல் 64 தொகுதிகளில், அ.தி.மு.க., அல்லது தி.மு.க., என்பது மாறாது. எனவே, 40 சதவீதம் ஓட்டு உள்ள பாரம்பரிய கட்சியில் இணைந்து, அந்த 64 தொகுதிகளில் வேட்பாளராக நின்றால் வெற்றி நிச்சயம்.
வெற்றி, தோல்விகள்
அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்வதே, அரசியல் தலைவர்களின் முதல் பண்பாக இருக்க வேண்டும். விருப்பு வெறுப்பு இல்லாமல், அரசியலில் பயணிக்க வேண்டும். அடுத்த கட்ட தலைவர்களை உருவாக்குவதே, தலைவர்களின் முதல் பண்பாக இருக்க வேண்டும். முதல் தோல்விலேயே பலர், அரசியலை விட்டு விலகி விடுகின்றனர். அரசியல்வாதிகளுக்கு வெற்றி, தோல்விகள் ஒரு நிகழ்வு அவ்வளவு தான். இவ்வாறு பேசினார்.