தூத்துக்குடியில் இன்று (26ம் தேதி) மண்டல அளவிலான காங்கிரஸ் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி , தூத்துக்குடி இரயில் நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் :
மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால், பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவைகளின் விலைவாசி உயர்வு, இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாயை எட்டியுள்ளது. விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருவாய்க்கு வழி வகை செய்யப்படும் என மோடி சொன்னார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில் நடைபயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் என்பது வலிமையான தேசிய இயக்க தோழர்கள் இருக்கக்கூடிய பகுதி, எனவே இங்கே உள்ள பெரும் பகுதி தேசிய இயக்க தோழர்கள் நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கெடுப்பதற்காக நான் இன்று தூத்துக்குடி வந்துள்ளேன்.
இந்திய சுதந்திரத்திற்கும் பாஜகவிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. காங்கிரஸை தொடர்ந்து பிற கட்சிகள், பொதுவுடமை கட்சிகள் கூட இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்துள்ளது. பல மாநிலங்களில் பல அரசியல் கட்சிகள் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்துள்ளன. தமிழகத்தில் தந்தை பெரியார் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார். ஆனால், இந்தியாவில் எந்தவொரு பகுதியிலும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தது இல்லை. அதற்காக அவர்கள் சுதந்திரத்தை கொண்டாட கூடாது என்று நான் சொல்லவில்லை. அவர்கள் கொண்டாடுவது மகிழ்ச்சிதான். ஆனால் அவர்களிடம் ஒரு கேள்வி, இத்தனை ஆண்டுகாலம் அவர்கள் சுதந்திர தின நிகழ்ச்சியை ஏன் புறக்கணித்தீர்கள்? சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஏன்?
ஆர்எஸ்எஸ் ன் தலைமையகத்தில் இரண்டு முறைதான் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஒன்று இந்தியா சுதந்திரம் பெற்றபோது, மற்றொன்று வாஜ்பாய் பிரதமராக இருந்த போது. எனவே, முன்னர் சுதந்திர தினம் கொண்டாடாமல் இருந்ததிற்கான காரணம் என்ன? இப்பொழுது கொண்டாடுவதற்கான காரணம் என்ன? என்பதைத் தான் நாங்கள் கேட்கிறோம் என அவர் தெரிவித்தார்.