தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை பல கட்டங்களாக பிரித்து நடத்தாமல், ஒரே கட்டமாக ஒரே நாளில் நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தினை அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போதிலிருந்தே தங்களை தயார் படுத்தி வருகின்றன.
கூட்டணி அமைப்பது , தொகுதி பங்கீடு செய்வது என முழு முனைப்புடன் களத்தில் இறங்கியுள்ளன.
களப்பணியின் அங்கமாக பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களையும் துவங்கி இருக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழு ஆலோசனை நடத்துவதற்காக நேற்று சென்னை வந்திருந்தது.
தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு மற்றும் 6 பேர் கொண்ட உயர்மட்ட குழு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரிதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, மார்க்ச்சிஸ்ட கம்யூனிஸ்ட் சார்பில் டி.கே. ரங்கராஜன், பாரதிய ஜனதா கட்சி சார்பில் துரைசாமி, காங்கிரஸ் சார்பில் தாமோதரன் மற்றும் தேமுதிக சார்பில் பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அரசியல் கட்சியினர் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை பல கட்டங்களாக பிரித்து நடத்தாமல், ஒரே கட்டமாக ஒரே நாளில் நடத்தவேண்டும் என்றும், பணப்பட்டுவாடாவை தடுத்து நேர்மையான முறையில் வாக்காளர்கள் வாக்களிக்க வழிவகை செய்யவேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தினை வலியுறுத்தினர்.