கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா இதற்கான முன்னெடுப்பு பணிகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வேளை ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா சந்திப்பு நடைபெற்றால் அதில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்.ஜி.எம்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வம், கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்து நேற்று மாலை வீடு திரும்பினார். இதைத் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வேண்டி அவரது ஆதரவாளர்கள் வீட்டிற்கு சென்ற வண்ணம் உள்ளனர். அதிமுக அலுவலகம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பால் மிகுந்த அப்செட்டில் இருந்து வருகிறாராம் ஓபிஎஸ்.
இதேபோல் வங்கிகள் விவகாரமும் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக பாதிக்கச் செய்துள்ளதாம். இந்தச் சூழலில் அடுத்தக் கட்டமாக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளில் அவரது டீம் இறங்கியுள்ளது. இதற்கு மத்தியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை, சசிகலா நேரில் சந்தித்து நலம் விசாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
அந்தச் சந்திப்பு விரைவில் நடைபெறக் கூடும் என்றும் அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் மனைவி காலமான போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறியவர் சசிகலா. இதனிடையே ஏற்கனவே பல முறை சசிகலாவை சந்தித்து பேசி வருபவர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா. இவர் தான் இப்படி ஒரு சந்திப்பு நிகழ வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறாராம்.
யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேசிக் கொள்ளட்டும் இதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மிக உறுதியாக இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், சசிகலாவையும், ஓபிஎஸ் சையும் ஒரு பொருட்டாகவே இபிஎஸ் தரப்பினர் கருதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.