ஆ.ராசாவின் கோரிக்கையை கேட்ட பிறகு எனக்கு தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று இனி தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெறலாம் என்றும் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் பாஜகவினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆ.ராசாவின் பேச்சை உடனடியாக கண்டிக்க வேண்டும் இல்லையேல் ஆ.ராசாவின் பேச்சு தமிழக அரசின் நிலைப்பாடாக கருதப்படும் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பதிவு செய்துள்ள பாஜகவின் நாராயணன் திருப்பதி, 'அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள், மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம் என்று முதலமைச்சரை மேடையில் வைத்து கொண்டு வேண்டுமென்றே இந்த பேச்சைப் பேசியிருக்கிறார் ஆ.ராசா. ஈ. வெ.ரா வழி வேறு, அண்ணா வழி வேறு என்று தெளிவாக கூறியிருக்கிறார் ஆ.ராசா. அதாவது, தி.க பிளவுபட்டது போல் திமுகவும் பிளவுபடும் என்கிறார். இது திமுகவிற்கான மிரட்டல்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தில் பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், 'ஆ.ராசா என்ற மகராசனின் தனித் தமிழ்நாடு ஆசைக்கு பிறகு எனக்கு ஒரு ஆசை வந்திருக்கிறது. தனி நாடு பற்றி நான் பேசவில்லை. அது அவருடைய சொந்த கருத்து. எனக்கு தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. நாங்களும் கேட்போம். தமிழ்நாட்டை பாண்டியநாடு பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும். நிர்வாக வசதிக்காக ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி, தென்காசியை இரண்டாக பிரித்தனர்.
அதன்பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு கிடைத்துள்ளன. அதுபோல தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்தால் இன்னும் பல திட்டங்களை கொண்டு வர முடியும். ஒரு மாநிலத்தில் இரண்டு என்ஜின் ஒரே இடத்தில் இருந்தால் தான் நல்லபடியாக ஓட்ட முடியும். தமிழகத்திலும் மத்தியிலும் பாஜக ஆட்சி இருந்தால் தான் நல்ல பல திட்டங்களை கொண்டு வர முடியும் என்பது என்னுடைய யோசனை.
தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம். தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று இனி போராட்டங்கள் நடைபெறலாம்.' எனத் தெரிவித்துள்ளார்.