முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இருந்து ஆரம்பிக்கிறார்.
மார்கழி மாதம் சனிக்கிழமை பஞ்சமி திதியான இன்று பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் வழிபட்ட பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்க இருக்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்துவதன் மூலம் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வலம் வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மாவட்ட ரீதியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு அதிகாரிகளை சந்திக்கின்றனர். போகும் வழிநெடுகிலும், மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டு வருகின்றனர்.
தமிழக தேர்தல் ஆணையம் நவம்பர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பெயர் சேர்த்தல் பணிகளை முடித்துள்ளது. விரைவில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளது தேர்தல் ஆணையம்.
எதிர்கட்சியினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் வேலைகளை ஆரம்பித்து சுற்றுபயணம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாவட்ட ரீதியாக கூட்டங்களை நடத்தி வருகிறார்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தை மதுரையில் ஆரம்பித்து தென்மாவட்டங்களில் மக்களை சந்தித்து நான்கு நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா இல்லாமல் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் சட்டசபைத் தேர்தலை அக்கட்சி சந்திக்கவுள்ளது. இந்த தேர்தல் இரு தலைமைகளின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய தேர்தல் என்பதால் மிகவும் முக்கியமான தேர்தலாகும்.
எனவே, தமிழக முதல்வர் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை இன்று ஆரம்பிக்க இருக்கிறார்.