• vilasalnews@gmail.com

ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி கொண்டு வர முயற்சிப்பதற்கு இது தான் காரணமா? கனிமொழி சொல்வது இது தான்!

  • Share on

ராயபுரத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய கனிமொழி, மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

கடந்த பிப். மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளையும் அப்படியே கைப்பற்றியது.

அதேபோல நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. அனைத்து எதிர்க்கட்சிகளும் மோசமான தோல்வியைச் சந்தித்தது.

இந்தச் சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு நன்றி கூறும் வகையிலும் பட்ஜெட் அறிக்கையை விளக்கும் வகையிலும் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று ராயபுரத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, ராயபுரம் எம்எல்ஏ ஐடிரீம்ஸ் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, 

'திமுக ஆட்சி பொறுப்பேற்ற சமயத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் இடம் கூட கிடைக்காமல் இருந்தன. ஆனால், திமுக அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் எந்தவொரு தொழிலும் தொடங்க முடியாத சூழலே இருந்தது. அப்போது பல நிறுவனங்கள் ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகளைக் கூட மூடி சென்றனர்.

ஆட்சி செய்ய தகுதியற்றவர்கள் ஆட்சியில் இருந்தார்கள். ஆனால், இப்போது நிலைமை நேர் மாறாக உள்ளது. திமுக ஆட்சியில் பலர் இங்கு முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். அதேபோல விவசாயிகள் நலன் காக்கும் அரசு திமுக அரசு உள்ளது. நாட்டிலேயே விவசாயத்திற்கு எனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்த மாநிலம் தமிழ்நாடு தான். விவசாயிகளைக் காப்போம் என்று பேசும் சிலர் தான் விவசாயிகளுக்கு எதிராகச் சட்டம் கொண்டு வந்ததை நாம் மறந்துவிடக்கூடாது.

பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து தமிழகத்தில் பெண்கள் உயர்கல்விக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 18 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்திலேயே உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் 250 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் உள்ளனர். இதை உருவாக்கியது திராவிட இயக்கம். இது தான் நம்ம முதல்வர் கூறிய திராவிட மாடல்.

ஆனால், இப்போது இதைத் தடுக்கும் வகையில் மருத்துவக் கல்லூரிகளில் நம் குழந்தைகள் படிக்க முடியாத வகையில் நீட் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% உள் ஒதுக்கீட்டை ஆதரிப்பதாக பாஜக கூறுகிறது. ஆனால், நீதிமன்றத்தில் உள் ஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என வாதிடுகிறது பாஜக. இதெல்லாம் மத்திய அமைச்சருக்குத் தெரியாதா என்ன

ஏற்கனவே நமக்கும் மத்திய அரசுக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளது. இப்போது அவர்கள் மொழி பிரச்சினையைக் கொண்டு வரப் பார்க்கின்றனர். இணைப்பு மொழியாக ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார் உள்துறை அமைச்சர். மத்திய அரசுக்குத் தெரிந்த இரண்டே மொழிகள் இந்தி மற்றும் சமஸ்கிருதம் தான். மருத்துவக் கல்லூரியில் படிக்கக் கூட சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்ற நிலையை உருவாக்க பார்க்கிறார்கள்.

ஆங்கிலம் தெரிந்து கொண்டால் பொதுமக்கள் உலக அறிவை பெற முடியும். மக்களுக்கு எதுவும் தெரியக் கூடாது என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது. பொதுமக்கள் எதாவது தெரிந்து கொண்டால் அவர்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதால் இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்கிறார்கள். கொள்கைகளை விட்டு விலகாமல் பொருளாதார வளர்ச்சியில் எப்படிச் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள் என்று டெல்லியில் பலரும் கேட்கிறார்கள். அதற்குப் பெயர் தான் திராவிட மாடல். பொருளாதார வளர்ச்சி என்பது அதானி, அம்பானியை மட்டும் வளர்ப்பது இல்லை' என்றார்.

  • Share on

இதே மாதிரி எனக்கும் பேச தெரியும்! சட்டசபையில் எடப்பாடியிடம் சீறிய துரைமுருகன்!

”மக்களுக்குப் பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி” ஓபிஎஸ் காட்டம்

  • Share on