தமிழ்நாடு சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையில் கடுமையான விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.
இன்று காலை சட்டசபையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முன்மொழிந்து பேசினார்.
இன்று அவையில் பேசிய நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் எல்லோரும் ஒரே பக்கத்தில் நிற்கிறார்கள். அவர்களுக்கு இடையில் வேறுபாடு இருந்தாலும் காவிரி பிரச்சனையில் ஒன்றாக நிற்கிறார்கள். நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சட்டசபைக்கு உள்ளே ஒற்றுமையாக இருந்தாலும், சட்டசபைக்கு வெளியே காவிரி விவகாரத்தில் நாம் ஒற்றுமையாக இல்லை. உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன். நாம் இப்போது சண்டை போட கூடாது. நீங்கள் யோக்கியனா, நான் யோக்கியனா என்று சண்டை போட நேரம் இது இல்லை.
இந்த காவிரி பிரச்சனையில் நாம் மோதலை விட்டுவிட்டு ஒன்றாக நிற்க வேண்டும். உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என்று குறிப்பிட்டார். இதையடுத்து அவையில் இன்று பேசிய அதிமுகவை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக சார்பாக காவிரி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார். அதிமுக காலத்தில் நடைபெற்ற சட்ட போராட்டங்களை குறிப்பிட்டார்.
சுமார் 10 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசினார். இதில் முழுக்க முழுக்க அதிமுக சார்பில் காவிரி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பெரிதாக பட்டியலிட்டார். அதோடு சட்ட போராட்டங்கள் எப்படி நடைபெற்றது, மேல்முறையீடு யார் ஆட்சியில் செய்யப்பட்டது, யார் ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது என்பது பட்டியலிட்டார். நீண்ட நேரம் அதிமுக அரசின் சாதனைகளை அவர் பட்டியலிட்டு பேசினார்.
இதையடுத்து பேசிய நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நான் என் உரையில் பேசும்போதே கனத்த இதயத்தோடு நான் தீர்மானத்தை கொண்டு வந்ததாக கூறினேன். நான் இப்போது வெந்து போன இதயத்தோடு பேசுகிறேன். நான் பேசும்போதே முந்தைய ஆட்சிகளில் செய்ததை பட்டியலிட வேண்டாம் என்று கூறினேன். உங்கள் ஆட்சியிலும் நிறைய செய்துள்ளீர்கள், எங்கள் ஆட்சியிலும் நிறைய செய்துள்ளோம். ஆனால் அதை எல்லாம் பேசிக்கொண்டு இருக்க வேண்டாம்.
நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பழைய விஷயங்களை பேச வேண்டாம் என்று கூறினேன். இப்படி சொல்ல வேண்டாம் என்றுதான் சொன்னேன். இதே மாதிரி என்னால் சொல்ல முடியும். நாங்களும் நிறைய செய்துள்ளோம் என்று அவருக்கும் தெரியும். காவிரி விவகாரத்தில் நான் தொடக்கத்தில் இருந்து கூட இருந்தவன். இதில் என்னவெல்லாம் நடந்தது என்று எனக்கு தெரியும். நான் பேச நினைத்தால் பல விஷயங்களை பேசலாம்.
ஆனால் நான் பேசியதை எல்லாம், கேட்டுக்கொண்டதை எல்லாம் மறுத்துவிட்டது எடப்பாடியார் சுயபுராணம் பாடிக்கொண்டு இருக்கிறார். நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் பேசியது எல்லாம் வீணாக போய் விட்டது என்று கூறினார். இதையடுத்து எழுந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, உங்கள் தீர்மானத்தை நாங்கள் ஏக மனதாக ஆதரித்து இருக்கிறோம். நாட்டு மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். உங்களுடைய ஆட்சியில் மத்தியில் கூட்டணியில் இருந்த போதே தீர்வு கண்டு இருக்கலாமே என்றுதான் நான் கூறி வருகிறேன் என்று எடப்பாடி பதில் அளித்தார்.
இதையடுத்து எழுந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், நீங்கள் எங்கள் ஆட்சியை குறை சொன்னாலும் சரி. என்னை குறை சொன்னாலும் சரி. அல்லது எங்கள் தலைவரை குறை சொன்னாலும் சரி. அதை நான் கேட்டுக்கொண்டு வாள் வீச போவது இல்லை. உங்கள் சில்மிஷங்களுக்கு நான் இடம் கொடுக்க மாட்டேன். நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். மற்ற இடையூறுகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டார்.