மு.க.ஸ்டாலினை இழிவுபடுத்தும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் பேசியதாகக் குற்றம்சாட்டி, ராஜேந்திரபாலாஜி உருவபொம்மையை எரிக்க முயற்சி, மோதலை தடுக்க போலீசார் தடியடி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம்
விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசியபோது, ஒருமையில் கடுமையாக சாடினார்.
இதைக் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மேலும் ராஜேந்திர பாலாஜி உருவ பொம்மையை எரிக்க திமுகவினர் முயற்சி செய்தபோது, போலீசார் அதைத் தடுத்து உருவ பொம்மையை பறிக்க முற்பட்டதால் மோதல் உருவானது.
உருவபொம்மையை பிடுங்க இருதரப்பும் இழுபறியில் ஈடுபட்டிருந்தபோது அதன் மீது ஒருவர் பெட்ரோல் ஊற்றினார். பின்னர் போலீசார் அதன் மீது தண்ணீர் ஊற்றினர்.
தள்ளுமுள்ளு, வாக்குவாதம், மோதலை தொடர்ந்து திமுகவினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த திடீர் போராட்டத்தால் மதுரை - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே திமுகவினரை கண்டித்து அதிமுகவினர் மறியலில் இறங்கியதால், அவர்களையும் போலீசார் கலைந்துபோகச் செய்தனர்.