விவசாயிகள் வேளாண் சட்டத்தை முழுமையாக புரிந்து கொண்ட பின், விவசாயிகளிடம் கூறி திருத்தங்களுடன் மீண்டும் அமல்படுத்தப்படும்," என்று பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் பாஜக சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மேலிடப்பார்வையாளராக வந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்தித்து பலத்தை நிரூபிக்க பா.ஜ.,வினர் தயாராக உள்ளனர். இத்தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்பது தான், தொண்டர்களின் கருத்தாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், பா.ஜ., போராட்டம் செய்தால் தான் செய்கிறார்.
முல்லை பெரியார் அணை விவகாரத்தில் போராட்டம் அறிவித்த பிறகு தான், அமைச்சர் துரைமுருகன் அணையை பார்வையிட சென்றார். அதுவரை தமிழக அரசு தூங்கிக் கொண்டிருந்தது. இப்படி தூங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு விடியல் அரசாங்கம் என்ற பெயர் வெட்ககேடானது.
வேளாண் சட்டங்களை பொறுத்தவரை, பா.ஜ, செய்தது தவறு என்று இதுவரை நினைக்கவில்லை. வேளாண் சட்டம் குறித்த புரிதலை விவசாயிகளிடம் கொண்டு வர இன்னும் காலஅவகாசம் வேண்டும் என்பதால், தற்போது வாபஸ் பெற்றுள்ளோம். சட்டங்கள் தவறு என்பதால் அல்ல. விவசாயிகள் வேளாண் சட்டத்தை முழுமையாக புரிந்துக்கொண்ட பிறகு, விவசாயிகளிடம் கூறி திருத்தங்களுடன் மீண்டும் அமல்படுத்தப்படும் என கூறினார்..