வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருக்கும் என்று மு.க.அழகிரி கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளதால் தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்'
வரும் தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும். கட்சி தொடங்குவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பாஜகவில் நான் இணைவதாக வெளிவரும் தகவல் வதந்தியே” என்றார்.
மேலும், மீண்டும் திமுகவில் இணைவீர்களா என்று கேட்ட போது ஆதரவாளர்களுடன் பேசியே முடிவு எட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 20ம் தேதி நடைபெற இருந்த ஆலோசனை குழு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அவர் பதில் கூறினார்.