நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களை குழப்பக் கூடாது என பாஜகவை சேர்ந்த ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, “சேலத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வருத்தமளிக்கிறது. எந்த ஒரு இறப்பும் வருந்தத்தக்கது தான், அதேவேளையில் காதல் தோல்வியால் தான் பலர் உயிரிழக்கின்றனர், அதற்காக காதலே செய்யக் கூடாது என்ற சட்டம் இயற்ற முடியுமா, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்தால் கூட சிலர் உயிரிழக்கின்றன, அதற்காக அந்த தேர்வை ரத்து செய்து சட்டம் நிறைவேற்ற முடியுமா..?
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களை குழப்பக் கூடாது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தான் தேர்வுகள் நடத்தப்படுகிறது, இதற்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டால் அது சட்டத்தை அவமதிக்கும் செயல்.
புதிய ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ள ரவிக்கு தமிழக முதல்வரே வாழ்த்துக்களை தெரிவித்து விட்டார்,காங்கிரஸ் தலைவர் அழகிரி ஏன் எதிர்ப்பு காட்ட வேண்டும்? அவர் நடத்திவரும் கல்லூரிகளில் பல்வேறு முறைகேடு செய்து வருவதால் தான் அழகிரி ஆளுநர் நியமனம் குறித்து விமர்சனம் செய்கிறார்” என தெரிவித்தார்.