செப்டம்பர் 17ம் தேதி இனி சமூக நீதி தினமாகக் கொண்டாடப் படும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.
பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், “சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கையை உருவாக்கினார் பெரியார். இதுவே நூற்றாண்டு சமூகத்தின் அடித்தளமாக அமைந்துள்ளது.
சமூகநீதி கதவைத் திறந்தது பெரியாரின் கைத்தடி; தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் சமூகநீதி இருப்பதற்கு காரணம் பெரியாரின் அடித்தளம் தான். யாரும் எழுதத் தயங்கியதை எழுதியவர்; யாரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார். 95 வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு போராடியவர் பெரியார். பெரியார் நடத்திய போராட்டங்கள் யாரும் காப்பியடிக்க முடியாதவை. பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது” என்றார். இந்த சூழலில் பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக முதலமைச்சர் அறிவித்ததற்கு அதிமுக வரவேற்பு தெரிவித்தது.
இந்நிலையில் பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், “சமூகநீதி பாஜகவின் கொள்கைகளில் ஒன்று; தந்தை பெரியாரின் கொள்கையும் அதுதான், கடவுள் நம்பிக்கையுடன் உள்ள பாஜக பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவிப்பதை வரவேற்கிறது” என்றார். இதை தொடர்ந்து பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது; இது பெரியார் போட்ட அடித்தளம் ” என்றார்.