“சமூக நீதியை" விரும்பாத சுப்பிரமணியன் சுவாமி போன்றோருக்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் எரிச்சலைத் தருகிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு பதவியேற்றதிலிருந்து இந்துசமய அறநிலைய துறையில் பல அதிரடி மாற்றங்கள், அறிவிப்புகள் நடைபெற்று வருகின்றனர். தமிழில் அர்ச்சனை, கோயில் நிலங்கள் மீட்பு என பல்வேறு அதிரடிகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு.
அதேபோல ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்திருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆக.14ஆம் தேதி ஆகம விதிகளில் பயிற்சிபெற்ற 58 பேரை அர்ச்சகர்களாக நியமித்து பணி ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இதனை ஒருசில தரப்பினர் எதிர்த்து விமர்சிக்கையில், ஏற்கெனவே பணியில் இருந்த அர்ச்சகர்களை விடுவித்து புதியவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப் பதாகக் குற்றஞ்சாட்டினர். இதனை திட்டவட்டமாக மறுத்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. யாரையும் விடுவித்து பணி நியமன ஆணை வழங்கவில்லை. கொச்சைப்படுத்த வேண்டுமென்று அரசியலுக்காக சிலர் குறை கூறுகிறார்கள்” என்றார்.
தற்போது இதுதொடர்பாகப் பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், “சமூக நீதியை விரும்பாத சுப்பிரமணியன் சுவாமி போன்றோருக்கு இந்தத் திட்டம் எரிச்சலைத் தருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தாலும் கோவில் கருவறையில் கால்வைக்க முடியாது என்ற நிலை நீடித்துவந்தது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் அகில இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்போம்” என்று கூறியுள்ளார்.