விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் அக்கா பானுமதி கடந்த ஆண்டு 5.08.2020 ல் கொரோனாவினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவர் உயிரிழந்து இன்றோடு ஒரு ஆண்டு கடந்துவிட்டது. இன்று முதலாமாண்டு நினைவு தினம்.
இதைமுன்னிட்டு திருமாவளவன், ‘’#2020_ஆக05:அக்கா பானுமதி எனும் வான்மதியைப் பாழும் கொரோனாவுக்குப் பறிகொடுத்துப் பதறிய நாள். சித்தம் கலங்கி செய்வதறியாது கைப்பிசைந்து கதறிய நாள். அடிவயிறு பற்றி எரிய அடித்தொண்டையில் துக்கம் அடைக்க அக்கா..அக்கா என அங்கம் பதற அலறித் துடித்து அரற்றிய நாள். ஓராண்டு உருண்டோடி விட்டது’’என்று தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் மேலும்,
அக்கா, உனை இழந்த துயரில் ஓராண்டாய் அம்மா
உன்பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியுமா
ஓயாமல் அழுது அழுது
உடலும் மனமும் உருகி அழுது
அம்மாவின் விழிகளில் நீர்வற்றிப் போனதால்
இடது கண்ணில்
இமைகளும் கருவிழியும்
இயங்காமலேயே
நிலைகுத்தி நின்றுபோனது
உனக்குத் தெரியுமா
அக்கா, என்ன நினைத்தாய்
அந்தக் கொடிய பொழுதில்?
என்னை நினைத்தாயா?
இனி என்னைக் கவனிக்க
எவருமில்லையே என
எண்ணித் துடித்தாயா?
படுக்கையில் வீழும்
பாழ்நிலை வந்தால்
அம்மாவைப் பார்த்துக்கொள்வது
யாரென பதைத்தாயா?
நீ பெற்ற பிள்ளைகளின்
முகங்காணும் ஆவலில்
மூச்சைக் கெட்டியாய் பிடித்தாயா?
என்று உருக்கமுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்விகளாக தனது துயரத்தை பதிவிட்டிருக்கிறார்.