மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருமங்கலம் அம்மா கோயிலில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக அரசு திசைமாறுகிறது. ஆகவே திமுக அரசுக்கு கடிவாளம் போடும் வகையில் வரும் 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் இல்லங்கள் முன்பு கண்டன பதாகைகளை ஏந்தி, நாம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்யும் சூத்திரம் எங்களுக்குத் தெரியும் என திமுகவினர் சத்தியம் செய்தனர். ஆனால் அவர்களை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி யுள்ளனர். பெண்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் என்னவாயிற்று? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி நேர்மையுடன் திமுக அரசு நடந்து கொள்ள வேண்டும். இதை விட்டு விட்டு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு மலிவான அரசியலை திமுக செய்கிறது.
அதிமுகவை அழித்துவிடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது. அதிமுகவை சேதப்படுத்த நினைக்கும் திமுகவுக்கு தோல்வியே கிடைக்கும். முதலில் உரிமைக்காகப் போராடுவோம். தீர்வு காணாவிட்டால் மக்களை திரட்டி போராடுவோம். நாம் ஆளுங்கட்சியாக இருந்தபோது, அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் கூறினோம். இப்போது எதிர்க்கட்சியாக இருப்பதால் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடி, ஏமாற்று நாடகத்தை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.