அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். இன்று காலை பத்து முப்பது மணிக்கு அவர் விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி செல்கிறார்.
முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென்று அவர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் அவர் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தன் மகன் ரவீந்திரநாத் எம்பிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் மிகுந்த நம்பிக்கையில் இருந்து வந்ததாக தகவல் வந்திருந்த நிலையில், புதிய அமைச்சரவையில் ரவிந்திரநாத் இடம்பெறாத நிலையில் பாஜகவுக்கும் அதிமுக இடையே தேர்தல் வெற்றி தோல்வி குறித்த கருத்து விவாதம் எழுந்தது.
அதிமுகவின் தோல்விக்கு பாஜக தான் காரணம் என்றும், பாஜகவின் தோல்விக்கு அதிமுக தான் காரணம் என்றும் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்த நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி உடைகிறதா? என்ற கேள்வி எழுந்தபோது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று விளக்கம் அளித்தனர்.
இந்த சூழ்நிலையில் ஓபிஎஸ் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக அதிமுக பாஜக – இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடந்தது? ஏன் இந்த அவசர பயணம் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. இருப்பினும் ஓபிஎஸ் டெல்லி செல்வது ஏன் என்பது குறித்த விளக்கத்தை அதிமுக இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.