தமிழகத்தில் நான்கு நாள் பயணமாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரை வந்துள்ள நிலையில் விடுமுறை நாளான நேற்று மதுரை மாநகராட்சி வெளியிட்ட சுற்றறிக்கை அகில இந்திய அளவில் வைரல் ஆனது. மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் தன்னிச்சையாக இதனை வெளியிட்டதாக சொன்னாலும் கோட்டை வரை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவரான மோகன் பகவத் ஜூலை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை மதுரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். குறிப்பாக சத்யசாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார்.
இதையடுத்து மதுரை மாநகராட்சியின் பணியமைப்புப் பிரிவின் உதவி ஆணையர் சண்முகம் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அந்தச் சுற்றறிக்கையில், மோகன் பகவத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு,அவர் கலந்துகொள்ளும் விழா நடக்கும் இடம் வரையிலான சாலைகளையும், தெரு விளக்குகளையும் சரிசெய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்தன. தி.மு.க. அரசு ஆர்.எஸ்.எஸ்க்குப் பயப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.
நிலமை விபரீதம் ஆவதை உணர்ந்த மதுரை மாநகராட்சி ஆணையர் சுற்றறிக்கை குறித்த விளக்கம் ஒன்றை அளித்தாலும் சர்ச்சை ஓய்ந்த பாடில்லை
இதைக் கேள்விப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரைக்கு போன் செய்து அங்கு என்னதான் நடக்கிறது தமிழகத்தில் நடப்பது யார் ஆட்சி என கொந்தளித்ததாக கூறப்படுகிறது. துறை அமைச்சரான கே.என்.நேருவுக்கு போன் செய்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
மாநகராட்சி துறை தான் இப்படி என்றால் காவல்துறைக்கு தனிப்பட்ட உத்தரவுகள் வந்து, முதல்வர் வருகை போல் சோலை அழகுபுரம் உள்ளிட்ட சாலை பகுதிகளில் இருந்த வாகனங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்குமாறு இன்று மாலை முதலே உத்தரவு போட ஆரம்பித்துவிட்டனர். அவர்களுக்கு இது சம்பந்தமான டூட்டி அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
என்னதான் திமுக ஆட்சி தமிழகத்தில் நடந்தாலும் மத்திய அரசின் செல்வாக்கு சத்தமில்லாமல் பரவிக்கிடக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது மதுரை மாநகராட்சியின் விவகாரம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.