நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியபோது அவருடன் அன்று முதல் பயணித்து வந்தவர் மகேந்திரன். இவருக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் , சட்ட மன்ற தேர்தலில் மகேந்திரன் போட்டியிட்டார். இருப்பினும் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலையில் மகேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து வெளியேறினார்.
கமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகுவதாக மகேந்திரன் அறிவித்த நிலையில் நேற்று மகேந்திரன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பத்மபிரியா உள்ளிட்ட பலருடன் ஒரு பெரும் படையாக மகேந்திரன் திமுகவில் நேற்று இணைந்தனர்.
இந்நிலையில் நடிகையும் மக்கள் நீதி மய்ய நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில், சட்டையை மாற்றுவது போல் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் சில அரசியல்காரியவாதிகள் (எதற்கும் எல்லா கட்சி சின்னத்துடன் சட்டைகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்…மாற்ற வசதியாக இருக்கும்) என்று குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.