பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாடநூல்கள், மேல்நிலைப் பள்ளிக்கான தொழிற்கல்விப் பாடப் புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் பல்நுட்பக் கல்லூரிக்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியை இக்கழகம் திறம்பட மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனம் பல்வேறு அரிய நூல்களை மறுபதிப்பு செய்யும் பணிகளை மேற்கொள்வதோடு, மொழிபெயர்ப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது பணிகளைச் செம்மையாகத் தொடர்ந்து மேற்கொள்ள, இந்நிறுவனத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை, முதல்வர் ஸ்டாலின் நியமனம் செய்து நேற்று முன் தினம் ஆணையிட்டுள்ளார்.
இந்நிலையில் இவரை பாடநூல் கழகத்தின் தலைவராக நியமித்தது குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். காரணம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்கள் இடுப்பை பற்றி இவர் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில் இவருடைய நியமனம் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது…!
மேலும் பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்..? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்..? திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.