பாஜக உடனான அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் தொடருமா என்பது பற்றி கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வி அடைந்து விட்டது. அதிமுகவின் தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று கூறி பரபரப்பை கிளப்பினார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம். விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மக்கள் அதிமுக ஆட்சியை விரும்பினார்கள். ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுக தோற்று விட்டது. பாஜகவால் சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழந்துவிட்டோம் என்று கூறியிருந்தார்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருக்கும் போதே சி.வி சண்முகம் இவ்வாறு கூறியது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக பொதுச் செயலாளர் கே.டி ராகவன், அதிமுகவால் தான் பாஜக தோற்றுவிட்டது.
நீங்கள் சொல்வது போல ‘உங்களால் தான்’ என்ற எண்ணம் எங்களிடமும் உள்ளது என்று கடுமையாக விமர்சித்திருந்தார். சி.வி.சண்முகத்தின் இந்த பேச்சு அதிமுக – பாஜக இடையே பெரும் மோதலை உண்டாகியுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவின் தோல்விக்கு யார் காரணம் என்ற விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். சி.வி சண்முகம் கூறியது அதிகாரப்பூர்வ கருத்தல்ல. அதிமுக உட்கட்சி கூட்டத்திலேயே அவர் அவ்வாறு பேசினார். இந்த விவகாரம் குறித்து கட்சியின் தலைமை முடிவெடுக்கும் என்று ஜெயக்குமார் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி கட்சி பற்றி தெரியும். பாஜக உடனான அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் தொடருமா என்பது பற்றி கட்சி மேலிடம் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.