அ.தி.மு.க தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததே காரணம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக சார்பில் திண்டிவனம் அருகே நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.
அப்போது பேசியவர், “ திமுகதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை. திமுகவினர் மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டனர். மாற்றத்தை விரும்பிய மக்கள் நாம் எடுத்த முடிவுகள் தோல்விக்கு காரணமாயிற்று. தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் பாஜக கூட்டணிதான். இதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்துவிட்டோம்.
சிறுபான்மையின மக்களுக்கு நம்முடம் கோபம் இல்லை. கொள்கை ரீதியாக அவர்கள் பாஜகவோடு முரண்பட்டு இருந்தார்கள். கொள்கை ரீதியாக அவர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிட்டது. நான் போட்டியிட்ட விழுப்புரம் தொகுதியில் 20 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளது.நகரத்தில் 18ஆயிரம் வாக்குகள். ஆனால் எனக்கு 300 வாக்குகள் கூட கிடைக்கவில்லை.
இதுதான் தமிழகம் முழுவதும் நடந்தது. கொள்கை ரீதியாக முரண்பாடு இருந்தாலும் அனைவரும் நன்றாக செயல்பட்டோம். உள்ளாட்சி தேர்தலில் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” எனப் பேசியுள்ளார்.