அமமுகவின் முக்கியப் புள்ளிகளை திமுகவில் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரின் இந்த ஆபரேஷன் குறித்தும், வரும் அதிமுகவினரின் நிர்வாகிகள் சிலரும் திமுகவில் இணைந்தது குறித்தும் நேற்று தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்துள்ளது.
அதன் விளைவாகத்தான் நேற்று பிற்பகல் திடீரென ஒரு சிலரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு ஒன்றையும் எடப்பாடி வெளியிட்டிருந்தார். ஆனால் வழக்கம் போல் சசிகலாவுடன் பேசியதால் தான் கட்சி உறுப்பினர்களை எடப்பாடி பழனிசாமி நீக்கியிருக்கிறார் என்று அதிமுகவினர் கருதினார். ஆனால் அதில் சேலம் புறநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளரான சி.செல்லத்துரை என்பவர் இடம்பெற்றிருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் செல்லத்துரை தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக பொறுப்பாளராக இருந்தவர். மேலும் எடப்பாடி பழனிசாமியின் வெற்றிக்காக பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டவர்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஒருவகையில் உறவினரான இவர், அவருக்கு சேலத்தில் முக்கியமான ஒரு கையாக இருந்துள்ளார். இவரை தான் தற்போது திமுகவில் இணைத்துள்ளார் செந்தில் பாலாஜி. அவருடன் இன்னும் சிலரையும் திமுகவில் இணைத்துள்ளார்.
இதனிடையே செல்லதுரை திமுகவில் இணைய உள்ள தகவலைக் கேட்டு ஷாக்கான எடப்பாடி பழனிசாமி, அவரை தொடர்பு கொண்டு பேச முயற்சித்துள்ளார். ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் கைகூடாததால் தான், அவர் திமுகவில் இணையும் முன்பே, அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்.
கொரோனா தடுப்புப் பணிகளுக்காக சேலம் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்ட போதே, இதற்கு வேறு சில அரசியல் காரணங்களும் இருக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக இருக்கும் சேலத்தில் இருக்கும் அதிமுகவின் முக்கிய பிரமுகர்களை திமுகவில் இணைக்கவே செந்தில்பாலாஜி சேலத்திற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
அதற்கேற்றார் போல தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான செல்லதுரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைத்திருப்பது எடப்பாடி தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
எடப்பாடி பழனிசாமியின் வெற்றிக்காக களப்பணியாற்றிய, செல்லத்துரை மட்டும் செந்தில் பாலாஜியின் டார்கெட் இல்லையாம்.. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வேறு சிலரும், அவரின் லிஸ்டில் இருக்கிறார்களாம். எனவே எடப்பாடிக்கு நெருக்கமான மேலும் சிலரும் கூட திமுகவில் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..