தன்னுடைய பினாமி கட்சியை கூட வெற்றி பெற வைக்க இயலாத சசிகலா அதிமுகவை என்ன செய்து விட முடியும்..? என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திந்து அவர் பேசுகையில்,
தற்பொழுது நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களை தெரிந்தே ஏமாற்றி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது எனவே அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர் 2006 முதல் 2016ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் தமிழகத்தில் வெறும் 74 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயன்பெற்றனர் ஆனால் தற்போது அதிமுக அரசு கொண்டு வந்துள்ள தமிழ்நாட்டில் இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பிறகு 450 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை திமுக அரசு கெடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு இதனால் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக என்னும் கட்சி யாரையும் நம்பி கிடையாது. இது ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம் எனவே அவர்களை மட்டுமே நாங்கள் நம்பி இருக்கிறோம்.
சசிகலா ஆடியோ குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதாவுக்கு உதவியாளராக வேலை செய்ய வந்தவர் தற்போது சசிகலாவின் வேலை முடிந்துவிட்டது அவரும் அவருடைய வேலையைப் பார்த்துக் கொண்டு சென்றுவிட்டார்.
அதிமுக தோல்வி அடைந்தாலும் வலுவான எதிர்க் கட்சியாக சட்டமன்றத்தில் உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் தன்னுடைய பினாமி கட்சியை கூட வெற்றி பெற வைக்க இயலாத சசிகலா அதிமுகவை என்ன செய்து விட முடியும்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.