சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடம் இருந்து அதிமுகவை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தற்போது கையிலெடுத்துள்ளார். இதை அதிமுக தலைமைக்கு தெரியப்படுத்தும் விதமாக தொண்டர்களிடம் பேசி அந்த ஆடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ஓபிஎஸ் – ஈபிஎஸ் சசிகலாவிடம் பேசுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர். அதன் படி, இதுவரை பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நேற்றும் கூட 5 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இருப்பினும், சசிகலா அதிமுக தொண்டர்களிடம் பேசுவதை நிறுத்தவில்லை. தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள், என்ன தான் தீர்மானம் நிறைவேற்றினாலும் தொண்டர்களை என்னுடன் பேச விடாமல் தடுக்க முடியாது என கூறி வருகிறார் சசிகலா.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியை சேர்ந்த பெரிய ராஜ் என்பவரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், கட்சி வளர வேர்கள் போல் காரணமாக இருக்கும் தொண்டர்களை மரத்தின் உச்சிக்கு மேல் உட்கார்ந்து கொண்டு நீக்குவது தவறு.
தொண்டர்கள் தியாகத்தினால் தான் கட்சி மாபெரும் சக்தியாக உள்ளது. தொண்டர்களை நீக்குவது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக நான் வருவேன். அம்மா போல நானும் கட்சியை வழி நடத்துவேன். தொண்டர்களின் ஆதரவோடு அதை செய்வேன் என்று கூறுகிறார்.