தமிழகம் முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதற்கு யாா் காரணம் என்பது குறித்து தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினா்கள் இடையே பேரவையில் விவாதம் நடைபெற்றது.
சட்டப் பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதத்தில் அ.தி.மு.க உறுப்பினா் ரவி பேசும்போது தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மின் தடை அதிகம் உள்ளதாகக் குறிப்பிட்டாா்.
அப்போது மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி குறுக்கிட்டுக் கூறியது:
கடந்த 9 மாதங்களாக அ.தி.மு.க ஆட்சியில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. 83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கிளைகள் 10 நாள்களாக கணக்கெடுத்து அதை அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பழுதான மின்கம்பங்கள் 36,767 ஆகும். சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பங்கள் 26 ஆயிரத்துக்கு மேல். தாழ்வாகச் செல்லும் மின் கம்பங்கங்கள் 29 ஆயிரத்துக்கும் மேல். இப்படி பல பணிகளை 9 மாதங்களாக பராமரிக்காததால்தான் மின்தடைகள் ஏற்பட்டுள்ளன. இவற்றைப் பராமரிக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க ஆட்சியில் மின்மிகை மாநிலம் இருந்ததாகக் கூறுகிறீா்கள். மின்மிகை மாநிலம் என்றால் 2.42 லட்சம் விவசாயிகள் மின் இணைப்புக்காகக் காத்திருக்கின்றனா். அவா்களுக்கு மின் இணைப்பை உடனடியாகக் கொடுத்திருக்கலாம்.
ஓ.பன்னீா்செல்வம் (எதிா்க்கட்சித் துணைத் தலைவா்) :
மரக்கிளை வெட்டாததாலும், மின்கம்பங்கள் பழுதுபட்டதாலும் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணி இல்லாததாலும்தான் மின்தடை ஏற்படுவதாக அமைச்சா் செந்தில்பாலாஜி கூறுகிறாா். ஆனால், மின் தடை என்பது 9 மாதங்களாக இல்லை. இந்த ஒரு மாதத்தில்தான் உள்ளது.
செந்தில்பாலாஜி:
டிசம்பா் மாதமும், ஜனவரி மாதமும் மின்தடை இருந்தது. 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் செய்யாததால் சோ்த்து செய்ய வேண்டியுள்ளது. அதனால்தான் மின்தடை ஏற்படுகிறது என்று கூறுகிறோம். 10 நாள்களுக்குள் பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்கிற நிலையை உருவாக்குவோம்.
தங்கமணி (அதிமுக):
9 மாதங்களாக பராமரிப்புப் பணி நடைபெறாததால் மின்வெட்டு ஏற்படுவதாக அமைச்சா் கூறினாா். தமிழகம் முழுவதுமே மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மரக்கிளைகளால் பாதிப்பு என்றால் குறிப்பிட்ட இடத்தில் மின்வெட்டு ஏற்படலாம். ஆனால், சென்னையில் புதைவட கம்பிகள் உள்ளன. சென்னையிலும் மின்வெட்டு ஏற்படுகிறது. அதற்குக் காரணம் என்ன என்பதை அமைச்சா்தான் விளக்க வேண்டும். பொதுவாக எந்தவொரு மாநிலமும் சொந்தமாக உற்பத்தி செய்து மின்மிகை மாநிலம் என்ற நிலையை எட்டியது இல்லை.
செந்தில்பாலாஜி:
சென்னையில் மின் பில்லா்கள் இருக்கின்றன. அவற்றை மாதா மாதம் முறையாகப் பராமரிக்க வேண்டும். அவற்றைப் பராமரித்தால்தான் மின்சாரத்தைச் சீராகக் கொடுக்க முடியும். அதை நீங்கள் செய்யவில்லை என்றுதான் கூறுகிறோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
கடந்த பத்து ஆண்டுகளாக தி.மு.க எதிர்கட்சியாக இருக்க முக்கிய காரணிகளில் ஒன்று மின்வெட்டு இவ்வாறு இருக்கையில் மீண்டும் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில் மறுபடியும் மின்வெட்டு பிரச்சனை எழுந்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.