அதிமுக தொண்டர் ஒருவருடன் சசிகலா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி மேலும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவின் அரசியல் ரீ எண்ட்ரியை உறுதி செய்யும் விதமாக அவர் அதிமுக தொண்டர்களிடம் பல ஆடியோக்கள் தொடர்ந்து அதில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் பேசும் அவர் யாரும் கவலைப்படாதீங்க.. நான் சீக்கிரம் வந்துருவேன்.. கஷ்டப்பட்ட வளர்ச்சி வீணாவதை என்னால் பார்க்க முடியாது என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசி வருகிறார்.
இப்படி சசிகலா தொடர்ந்து தொண்டர்களுடன் பேசி வரும் நிலையில், நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி. உள்ளிட்டோர் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் சசிகலா நேற்று பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் சசிகலா “ கட்சிக்காரர்கள் எல்லாம் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். தொண்டர்கள் எல்லாரும் என்னுடன் இருக்கும்போது, கட்சியை அழிய விடமாட்டேன். யாரும் கவலைப்படாதீங்க.. 1989-ல் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினையை உடன் இருந்து எதிர்கொண்டுள்ளேன். அப்போது ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் ஆதரவு இருந்தது.. அதே போல எனக்கு தொண்டர்கள் ஆதரவு உள்ளது.
எனவே, இவர்கள் செய்வது எல்லாம் எனக்கு புதிது இல்லை. . எதிர்கட்சியாக இருக்கும் போது தொண்டர்களை நீக்குவது கஷ்டமாக உள்ளது. கட்சியை மீட்டு நல்லபடி கொண்டு செல்வோம்.. ஆட்சியமைப்போம்.. இதை யாராலும் தடுக்க முடியாது. தொண்டர்கள் நலனுக்காகவே நாம் உழைத்துள்ளோம்.. கவலைப்படாதீங்க..” என்று தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் சசிகலாவுடன் பேசுவோரை அதிமுக தலைமை கட்சியை விட்டு நீக்கி வரும் நிலையில் தற்போது கட்சியை மீட்பேன் என்று சசிகலா பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது