தமிழக பாஜக தலைவர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
நிவர் புயல் நவம்பர் 25ம் தேதியில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 80 கி.மீ முதல் 120 கி.மீ. வேக பலத்த காற்றுடன் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக செல்ல வேண்டும். தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாஜக தொண்டர்கள், கடலோர பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள், குடிநீர் வழங்குவதற்கான தேவையான தயாரிப்புப் பணிகளில் இப்பொழுதே ஈடுபட வேண்டும்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகுதிகளில் வெற்றிவேல் யாத்திரை நவம்பர் 24, 25 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. புயல் பாதிப்பு பகுதிகளில் பாஜகவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் வகையில், இந்த இரு நாட்களும் வெற்றிவேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது இவ்வாறு அறிக்கையில் முருகன் கூறியுள்ளார்.