கொரோனாவின் 2வது அலையில் நாடு முழுவதும் இதுவரை 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்புக்கு ஆளாகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தீவிரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதும், ஆயிரக்கணக்கில் உயிரிழப்பதும் வழக்கமாகி வருகிறது.
பல இடங்களில் மயானங்கள் இடைவெளியின்றி எறிந்த வண்ணமே இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பெரிதும் குழந்தைகளே இலக்காகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் :
ஏப்ரல் மாத்தில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 577 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குழந்தைகள் நெருங்கிய உறவினர்கள் அல்லது குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர்களின் வீடுகளில் வசித்து வருவதாக மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவரையும் மாநில அரசுகள் உதவியுடன் மத்திய அரசு தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கூறியுள்ளது. ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளின் நலனுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருப் பதாகவும் தெரிவித்துள்ளது.
சில மாவட்டங்களில் ஆதரவற்ற குழந்தைகளை கடத்த முயற்சி நடைபெற்றதாகவும் புகார் எழுந்துள்ளதை அடுத்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் உதவியுடன் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக குழந்தைகள் நல அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.