நாட்டில் 50 சதவீதம் பேர் முறையாக மாஸ்க் அணிவதில்லை எனவும் 64 சதவீதம் பேர் மாஸ்க்கை சரியாக அணியாமல் பேரளவிற்கு மட்டுமே அணிகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் கூறி இருப்பதாவது: நாட்டில் 8 மாநிலங்களில் ஒரு லட்சம் பேர் வரையிலும், 9 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரையிலும் 19 மாநிலங்களில் 50 ஆயிரம் பேர் வரையில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மற்றும் மே.வங்க மாநிலங்களில் சுமார் 25 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த பிப்., மாத மத்தியில் இருந்து தற்போது வரையில் தொற்று சார்ந்த பரிசோதனை மேற்கொள்வது 2.3 மடங்கு அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பு குறையும் மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஏப்29 முதல் மே 5 வரையிலான கால கட்டத்தில் 210 -ல் இருந்ததது. அவை மே 13-19 காலகட்டத்தில் 303 ஆக அதிகரித்துள்ளது.
ஏழு மாநிலங்களில் தொற்று பாதிப்பு 25 சதவீதத்திற்கு அதிகமாகவும், 22 மாநிலங்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமாகவும் காணப்படுகிறது. நாட்டில் 50 சதவீதம் பேர் முறையாக மாஸ்க் அணிவதில்லை . 64 சதவீதம் பேர் மாஸ்க்கை சரியாக அணியாமல் பேரளவிற்கு மட்டுமே அணிகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் ஐ.சி.எம்.ஆர்.-ன் மருத்துவர் பல்ராம் பார்க்கவா கூறுகையில் மே மாத இறுதிக்குள் 25 லட்சம் அளவிற்கு பரிசோதனைகள் நடத்தி முடிப்பது எனவும், ஜூன் மாத இறுதிக்குள் 45 லட்சம் பரிசோதனை நடத்துவது எனவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார். தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ.,வின் 2டிஜி மருந்து குறித்து கூறுகையில் இது மறு பயன்பாட்டு மருந்து எனவும் இந்தமருந்து முன்னர் புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது என கூறினார்.